Monday, August 4, 2008

பெர்மாத்தாங் பாவில் அன்வார்

மலேசியாஇன்று, Aug 04 2008, 8:22 pm (செய்தி)
.
பெர்மாத்தாங் பாவ் கோட்டைக்கு அன்வார் இப்ராகிம் ஒரு வேட்பாளராக மட்டுமல்லாமல் பிரதமர் பதவிக்கான பக்காத்தானின் நியமனதாரராகவும் வந்திருக்கிறார்.
.
நேற்றிரவு செபராங் பிறையில் நிகழ்ந்த பேரணி ஒன்றில், பினாங்கு முதல் அமைச்சர் லிம் குவான் எங் இவ்வாறு பிரகடனம் செய்தார்.
.
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின் நோக்கம், அன்வாருக்கு நாடாளுமன்றத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல. “நாட்டின் அரசியல் நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெறுவதுமாகும்”, என்றவர் கூறினார்.
.
“பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்கள் அன்வாருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்து பாரிசானைத் தோற்கடிக்கவும் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றவும் உதவிட வேண்டும்.”
.
“பெர்மாத்தாங் பாவில் போடப்படும் வெற்றி என்னும் சாலை, புத்ராஜெயாவைச் சென்றடைய வேண்டும்”. செபராங் பிறை கண்காட்சி மையத்தில் 20,000 பேர் நிரம்பிய கூட்டத்தில், கூட்டத்தினரின் ஆரவாரமான வரவேற்புக்கிடையில் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் இவ்வாறு கூறினார்.
.
அதற்கு முன்னர் பேசிய அன்வார், இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது முக்கியம். அப்போதுதான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்றார்.

.
பணவீக்கம், ஊழல், நீதித்துறை நெருக்கடி, அதிகார அத்துமீறல் ஆகியவற்றாலும் எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிட்ட சிலர் நாட்டின் வளத்தைச் சுரண்டுவதாலும் நாடும் மக்களும் அல்லல்படுவதாக அன்வார் கூறினார்
.
அன்வாரைத் தோற்கடிக்க அவரின் எதிரிகள் வாக்களிப்பில் மோசடிகள் செய்யக்கூடும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர் என்றாலும் அன்வார் வெற்றிபெறுவதைத் தடுக்க இயலாது என்றவர்கள் கூறினர்.
.
“வாக்குகள் வாங்குவதற்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் வாரி இறைக்கப்படும். பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குச்சீட்டை எனக்கு அளியுங்கள்”, என்று அன்வார் கூறினார்.
.
அன்வாருக்கு எதிரான குதப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை பாரிசான் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அக்குற்றச்சாட்டு வாக்காளரிடையே எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
.
பாரிசான் நேசனல் தலைவர்கள்கூட அன்வாரைத் தோற்கடிப்பது எளிதல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
.
“பாரிசான் கடும் எதிர்ப்பைக் கொடுக்கும். ஆனால் முடிவில் அன்வார்தான் வெற்றி பெறுவார்”, என்கிறார் பாரிசான் தலைவர் ஒருவர்.